மன்னார்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கோரி வழக்கறிஞர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 3 February 2026

மன்னார்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கோரி வழக்கறிஞர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.


மன்னார்குடி, பிப். 03:


மன்னார்குடியில் நீண்ட ஆண்டுகளாக நிலவி வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், அதற்காக தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, மன்னார்குடி வழக்கறிஞர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில்,

  • 2 குற்றவியல் நீதிமன்றங்கள்

  • 1 உரிமையியல் நீதிமன்றம்

  • 1 சார்பு நீதிமன்றம்

  • 1 குடும்ப நல நீதிமன்றம்


ஆகியவை இயங்கி வருகின்றன. இதில் சார்பு நீதிமன்றம் மற்றும் குடும்ப நல நீதிமன்றம் முழுமையாக வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன. அரசு கட்டிடங்களில் இயங்கி வரும் மற்ற நீதிமன்றங்களும் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால், வழக்கறிஞர்களுக்கான கழிவறை, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


மேலும், நீதிமன்றங்கள் பல்வேறு இடங்களில் பிரிந்து இயங்குவதால் வழக்கறிஞர்களும், வழக்குத் தொடுத்த பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று, மதுக்கூர் சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டு, விரைவில் கட்டுமானம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


ஆனால், தமிழக அரசு இதுவரை புதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை என வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், மத்திய அரசு நீதிமன்ற கட்டமைப்புக்காக அனுப்பும் கோடிக்கணக்கான ரூபாய் நிதி பயன்படுத்தப்படாமல் திரும்பிச் செல்லும் நிலையில், மன்னார்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு மட்டும் ஏன் நிதி ஒதுக்கப்படவில்லை என்ற கேள்வியையும் வழக்கறிஞர்கள் எழுப்பினர்.


இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, மன்னார்குடி சார்பு நீதிமன்றம் மற்றும் குடும்ப நல நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் பேசுகையில், “ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை தமிழக அரசு உடனடியாக கட்டி தர வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அதிமுக அரசு ஆட்சி அமைந்தவுடன் முதல் நடவடிக்கையாக மன்னார்குடியில் புதிய நீதிமன்ற வளாகம் கட்டித் தரப்படும்” என தெரிவித்தார்.


இந்த உண்ணாவிரத போராட்டத்தில், சிவ. ராஜமாணிக்கம், ஆர்.ஜி. குமார், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், சேவை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad