கூத்தாநல்லூர், பிப். 06:
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடியில், இஸ்லாமியர்களுக்கு சொந்தமான 50 ஆண்டுகள் பழமையான உமர் பின் கத்தாப் பள்ளிவாசல் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு, சிங்கப்பூர் தொழிலதிபர் அப்துல் அஜீஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொகிதீன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் “தமிழ் படித்தால் பிச்சை கூட எடுக்க முடியாது” என பேசியதாக கூறிய கருத்தை கடுமையாக கண்டித்தார். “தமிழ் என்பது இறைவனைத் துதிக்கும் மொழி; உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் சிறந்தது தமிழ் என திருமூலர் கூறியுள்ளார். அத்தகைய மொழியை இழிவுபடுத்துவது புரியாமையையும் பொறுப்பற்ற தன்மையையும் காட்டுகிறது” என்றார்.
மேலும், தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு வருவது குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், “காக்கைகள் கூட்டமாக வந்தால் அவை குயில்களாகவோ மயில்களாகவோ மாறிவிடுமா? தேர்தல் வருவதால் வடநாட்டிலிருந்து தலைவர்கள் வருவது வழக்கம். அதனால் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து விடும் என நினைப்பது தவறு” என்றார்.
“தாமரை பூக்க வேண்டும் என்றால் தடாகம் வேண்டும். தமிழ்நாடு தாமரை மலரக்கூடிய தடாகம் அல்ல; இது ஒரு பெருங்கடல். கடலில் தாமரை மலராது. ஆகவே தமிழகத்தில் தாமரை பூக்கும் வாய்ப்பே இல்லை” என்று அவர் கடுமையாக தெரிவித்தார். இந்த பேட்டி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.jpg)
No comments:
Post a Comment