ஒன்றிய அரசின் தாக்குதல் கொடூரமானது; மன்னார்குடியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேச்சு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 7 February 2026

ஒன்றிய அரசின் தாக்குதல் கொடூரமானது; மன்னார்குடியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேச்சு.


மன்னார்குடி, பிப்.07:


ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழக அரசு மீது தொடுக்கும் தாக்குதல் மிகவும் கொடூரமானது. தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை தினந்தோறும் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது என்று தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற “வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் – 2026” நிகழ்ச்சியை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தொடங்கி வைத்து உரையாற்றினார்.


இந்த கண்காட்சியில் விவசாய உபகரணங்கள், நவீன விவசாய இயந்திரங்கள், ட்ரோன் தொழில்நுட்பம், இயற்கை விவசாயம், புதிய பயிர் இரகங்கள், மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் சிறுதானிய உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.


நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வ. மோகனசந்திரன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ், வேளாண் துறை அதிகாரிகள், விவசாயிகள், வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது உரையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதிதாக 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை வழங்கியுள்ளதாக கூறினார். ஒன்றிய அரசு நிதி வழங்குவதில் பின்வாங்கினாலும், அதையும் மீறி தமிழகத்தில் விவசாயிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


மேலும், இந்தியா முழுவதும் 7 சதவீத வளர்ச்சி மட்டுமே உள்ள நிலையில், ஒன்றிய அரசின் நிதி பற்றாக்குறையையும் கடந்து தமிழ்நாடு 11.19 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக கூறினார். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் கற்றுக் கொடுத்த கொள்கைகளின் அடிப்படையில் தமிழ்நாடு தனித்துவம் பெற்று முதன்மை மாநிலமாக உயர்ந்து நிற்பதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினே காரணம் என்றும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad