மன்னார்குடி | ஜனவரி 01
மன்னார்குடியில் மூத்த குடிமக்கள் பேரவை சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் 75 வயதை அடைந்த மூத்த குடிமக்கள் கௌரவிக்கப்பட்டதுடன், BMD (Bone Mineral Density) பரிசோதனை இலவசமாக வழங்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட டாக்டர் முகேஷ் மோகன் பேசுகையில், முதியவர்கள் மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் வலி ஏற்பட்டவுடன் உடனடி அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டாம் என்றும், முதலில் வலிக்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கேற்ற முறையான சிகிச்சை பெற வேண்டும் என்றும் செயல்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, டாக்டர் மோகன்ராஜ் பேசுகையில், மூட்டு வலி மற்றும் இடுப்பு வலிக்காக அதிக அளவில் மருந்துகள் பயன்படுத்தப்படுவதால், டெல்டா மாவட்டங்களில் சிறுநீரக (Kidney) பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக எச்சரித்தார்.
மேலும், சர்க்கரை நோய் காரணமாக சிறுநீரகம், கண் பாதிப்பு, பாதத்தில் உணர்வு இன்மை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம், சர்க்கரை நோயாளிகள் ஆண்டுதோறும் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், உடலை முறையாக பராமரிக்காவிட்டால், சர்க்கரை நோய் காரணமாக பாதத்தில் புண் ஏற்பட்டு 25 சதவீதம் பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இறுதியாக, “டிடி ஊசி போட்டால் புண் தானாக சரியாகிவிடும்” என்பது ஒரு தவறான நம்பிக்கை என்றும், புண்களுக்கு மருத்துவ பரிசோதனை, சரியான சிகிச்சை மற்றும் தொடர்ந்து கண்காணிப்பு அவசியம் என்றும் முதியவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.
இந்த விழா, முதியோர் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை அதிகரித்த நிகழ்வாக அமைந்தது.

No comments:
Post a Comment