மன்னார்குடி | ஜனவரி 01
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட மேல திருப்பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த கனிமொழியின் கணவரான ரவிக்குமார், இந்திய ராணுவத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று ஊருக்கு வந்ததைத் தொடர்ந்து, கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.
ஜம்மு–காஷ்மீர், டெல்லி, இந்தியா–பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள், இந்தியா–சீனா எல்லை, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் அவர் சேவையாற்றியுள்ளார். மேலும், ஐக்கிய நாடுகள் சபை சார்பிலான இந்திய ராணுவப் படையினருடன் இணைந்து, இஸ்ரேல் நாட்டில் போர் நடைபெற்ற காலகட்டத்திலும் ராணுவப் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊருக்கு வந்த ரவிக்குமாரை, மேல திருப்பாலக்குடி கிராம மக்கள் தங்களின் மருமகனாகக் கருதி மேளதாள வாத்தியங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து, விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக அவரது இல்லம் வரை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், அவரது மகன் “ரெப் ரைட்” எனக் கூறி தந்தை ரவிக்குமாருக்கு வணக்கம் செலுத்தியது அனைவரையும் நெகிழ வைத்தது. மனைவி கனிமொழியும் கணவருக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சால்வை அணிவித்து அவரை கௌரவித்தனர்.
மேலும், “எங்கள் கிராம இளைஞர்கள் அனைவரும் ரவிக்குமாரை முன்மாதிரியாக கொண்டு ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும்” என கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த வரவேற்பு நிகழ்வு, நாட்டுப்பற்றும் சமூக ஒற்றுமையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

No comments:
Post a Comment