அரசுப் பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்; உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு – தப்பியோடிய ஆசிரியரை காவல்துறை தேடல். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 8 January 2026

அரசுப் பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்; உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு – தப்பியோடிய ஆசிரியரை காவல்துறை தேடல்.


மன்னார்குடி, ஜன.08:


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே செயல்பட்டு வரும் சவளக்காரன் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளிடம் முறைகேடாக நடந்துகொண்டதாக தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த பள்ளியில் மன்னார்குடி பைபாஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். கால்பந்து விளையாட்டிற்காக கடந்த சில ஆண்டுகளாக மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வந்த அவர், 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவிகளிடம் பயிற்சி அளிக்கும் போது இரட்டை அர்த்தத்தில் பேசி மனரீதியான தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்துள்ளது.


இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியர் மற்றும் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.


விசாரணையின் அடிப்படையில், அரசு பள்ளியில் தற்காலிகமாக பணியாற்றி வந்த உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது. ஆனால், காவல்துறை நடவடிக்கை தொடங்கியதை அறிந்த முத்துக்குமார் தலைமறைவானதாக கூறப்படுகிறது. அவரை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும், குற்றச்சாட்டுக்குள்ளான முத்துக்குமார் ஏற்கனவே காதல் திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக மனைவியிடமிருந்து பிரிந்துள்ள நிலையில், தற்போது மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரிடம் பயிற்சி பெற்ற காவல்துறையில் பணியாற்றும் சில பெண்களின் ஏடிஎம் கார்டுகள் அவர் வசம் இருந்ததாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.


இந்த சம்பவம் பள்ளி மற்றும் பெற்றோர் வட்டாரங்களில் கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad