கொள்கை ரீதியாக உறுதியுடன் இருப்பவர் ஸ்டாலின் மட்டுமே – அவரது ஆட்சி தொடர வேண்டும்: திருவாரூரில் கே.எஸ்.அழகிரி பேட்டி. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 6 January 2026

கொள்கை ரீதியாக உறுதியுடன் இருப்பவர் ஸ்டாலின் மட்டுமே – அவரது ஆட்சி தொடர வேண்டும்: திருவாரூரில் கே.எஸ்.அழகிரி பேட்டி.


திருவாரூர், ஜன. 06:


திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் கே. எஸ். அழகிரி திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்து விரிவாக பேட்டி அளித்தார்.


அப்போது அவர் கூறியதாவது: “தற்போது தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே கொள்கை ரீதியாக தெளிவாகவும் உறுதியாகவும் செயல்படுபவர் மு.க. ஸ்டாலின் மட்டுமே. அவரது தலைமையிலான ஆட்சி தொடர்ந்து நீடிக்க வேண்டும். அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை” என்றார்.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பேசிய அவர், “நூறு ஆண்டுகளாக நடைமுறையில் இல்லாத ஒரு பழக்கத்தை, தேர்தல் வரும் இந்த ஆண்டில் திடீரென சிலர் முன்வைக்கிறார்கள். இதன் பின்னணி முழுக்க அரசியல் நோக்கமே. தேர்தல் நேரத்தில் கலவரம், பிரச்சனை உருவாக்குவதற்காகவே இவை செய்யப்படுகின்றன. தமிழக மக்கள் அறிவார்ந்தவர்கள்; இத்தகைய முயற்சிகளை அவர்கள் எளிதாக புரிந்து கொண்டு புறந்தள்ளுவார்கள்” என தெரிவித்தார்.


மேலும், “காங்கிரஸ் கட்சி இந்து மதத்தின் மீதும், கடவுள் மீதும் நம்பிக்கை கொண்ட கட்சிதான். முருகப்பெருமானுக்கு செய்ய வேண்டிய மரியாதைகள் அனைத்தையும் நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் மரபு, காலம், இடம் ஆகியவற்றை மதிக்காமல் திடீரென மாற்றங்களை செய்ய முயல்வதே தவறு. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ள நிலையில், அதைப்பற்றி மேலும் விவாதிக்க விரும்பவில்லை” என்றும் கூறினார்.


கூட்டணி அரசியல் குறித்து பேசிய கே.எஸ்.அழகிரி, “அதிக இடங்கள் கேட்பதும், ஆட்சியில் பங்கு கேட்பதும் தவறல்ல. இது காங்கிரசின் உரிமை. ஆனால் அதற்காக திமுக கூட்டணியை விட்டு விலகுவோம் என்ற பேச்சுகள் முற்றிலும் தவறானவை. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு தலைமை வகிப்பது திமுக; அதன் முதல்வர் ஸ்டாலின். அந்த கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.


அதிமுக மற்றும் என்.டி.ஏ குறித்து விமர்சித்த அவர், “அதிமுக இன்று மாநில உரிமைகளை பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அமித்ஷா என்.டி.ஏ ஆட்சி அமைக்கும் என்கிறார்; அதிமுக தங்களே ஆட்சி அமைப்போம் என்கிறது. ஆனால் காங்கிரஸ் தெளிவாக திமுக தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம் என்று கூறுகிறது” என்றார்.


காமராஜர் பேத்தி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “அது பற்றி எனக்கு தகவல் இல்லை” என கே.எஸ்.அழகிரி பதிலளித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad