மன்னார்குடி – டிசம்பர் 08
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மகரிஷி கோவில் என்று அழைக்கப்படும் கோபிரலயம் வாசுதேவப் பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் இன்று அதிகாலை வேத மந்திர ஒலியுடன் விமர்சையாக நடைபெற்றது.
தலவரலாறு கூறுவதாவது, கோபிலர் மற்றும் கோபிரலயர் என்ற இரண்டு முனிவர்கள் கிருஷ்ணாவதாரத்தை காண புறப்பட்டபோது, நாரதர் அவர்கள் சந்தித்ததாகவும், கிருஷ்ணாவதாரம் முடிந்துவிட்டது என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. கிருஷ்ணரை தரிசிக்க விரும்பினால் மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளம் அருகே தவம் செய்ய வேண்டும் என்று நாரதர் அறிவுறுத்தினார். அதன்படி தவம் செய்த முனிவர்களுக்கு பகவான் விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தின் 32 சேவைகளையும் அருளிச் செய்து தரிசனம் தந்ததாக இந்தத் தலம் சிறப்பாக போற்றப்படுகிறது.
இத்தகைய ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு, மூன்று தினங்கள் சிறப்பு யாகங்கள், ஹோமங்கள் நடத்தப்பட்டது. மங்களப்பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு, பக்தர்கள் பங்கேற்பில் பூஜைகள் இடம்பெற்றன.
இன்று அதிகாலை 6 மணிக்கு பூர்ணாஹுதி நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் கடம்புறப்பாடு நிகழ்த்தப்பட்டு, கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நிறைவேற்றப்பட்டது. ஸ்ரீதேவி–பூதேவியுடன் வாசுதேவப்பெருமாளுக்கும், மகரிஷிகளுக்கும் புனித நீராட்டு செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
கும்பாபிஷேக விழாவில் ராஜகோபாலசுவாமி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் கருடா இளவரசன், கோவில் நிர்வாக அதிகாரி மாதவன், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

No comments:
Post a Comment