மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மன்னார்குடி ஒன்றிய கிளை மாநாடு சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு கிளைத் தலைவர் முனைவர் எஸ். அன்பரசு தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் அப்டெக் ப. ரமேஷ், நல்லாசிரியர் ஆர். சந்திரா மற்றும் மாவட்ட இணைச் செயலாளர் எஸ். சுபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச் செயலாளர் யு. எஸ். பொன்முடி மாநாட்டை ஒருங்கிணைத்தார்.
இந்த மாநாட்டில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான ஒன்றிய கிளை செயற்குழு தேர்வு நடைபெற்றது. இதில் 15 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, தலைவராக முனைவர் கே. விஜயன், செயலாளராக முனைவர் எஸ். அன்பரசு, பொருளாளராக கே.வி. பாஸ்கரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர்களாக எஸ். கமலப்பன், ப. எழிலரசி, ப. சங்கர் ஆகியோரும், இணைச் செயலாளர்களாக எஸ். அருள், மு. ராமாமிர்தம், வி. பாலன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளை வாழ்த்தி மாநில துணைத் தலைவர் வ. சேதுராமன் நிறைவுரை ஆற்றினார். அவர் உரையாற்றும்போது, சமூக முன்னேற்றத்திற்கு அறிவியல் சிந்தனை அவசியம் என்றும், அறிவியல் இயக்கத்தின் செயல்பாடுகள் மக்களிடம் அறிவியல் மனப்பாங்கை வளர்க்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மாநாட்டில் வருங்கால திட்டங்களாக, வாசிப்பு இயக்கத்தை முன்னெடுப்பது, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வான்நோக்கி (Astronomy) தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கல்லூரிகளில் அறிவியல் இயக்க கிளைகளைத் தொடங்குவது, சமூக மாற்றத்திற்காக அறிவியல் செயல்பாடுகளை மையமாகக் கொண்ட குறும்படங்களை பொது இடங்களில் திரையிடுவது, பொதுமக்கள் கூடும் இடங்களில் எளிய அறிவியல் பரிசோதனைகளை செய்து காட்டுவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, கிளைப் பொருளாளர் கே.வி. பாஸ்கரன் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment