கூத்தாநல்லூர் – டிசம்பர் 23
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே, கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட நன்னிமங்கலம் கிராமத்தில், தாய் மற்றும் தந்தையை இழந்து ஆதரவின்றி தவித்து வரும் மூன்று குழந்தைகளின் நிலை, அப்பகுதியில் உள்ள பொதுமக்களை உருக்கமாக்கியுள்ளது. நன்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் – சுமதி தம்பதியருக்கு, ஸ்வாதி, ஸ்வேதா என இரண்டு பெண் குழந்தைகளும், சுவேஷ்வர் என்ற ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். குடும்பத்தின் வாழ்வாதாரமாக தையல் தொழில் செய்து வந்த சிவக்குமார், தனது வருமானத்தின் மூலம் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், அவரது மனைவி சுமதி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, மூன்று குழந்தைகளையும் தனியாகப் பராமரித்து வந்த சிவக்குமார், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால், தாய்–தந்தை இருவரையும் இழந்த மூன்று குழந்தைகளும் தனியாக வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஸ்வாதி மற்றும் ஸ்வேதா இருவரும் கூத்தாநல்லூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முறையே 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பயின்று வருகின்றனர். சிறுவன் சுவேஷ்வர், அரசு உதவி பெறும் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கல்வியில் ஆர்வமுடன் இருக்கும் இம்மூவரும், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தாமல் தொடர விரும்புகின்றனர்.
ஆனால், உறவினர்கள் யாரும் உதவ முன்வராத நிலையில், இவர்கள் வசித்து வரும் கூரை வீடு மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. வெயில், மழை மற்றும் குளிர்காலங்களில் கடும் அவதிக்கு உள்ளாகும் குழந்தைகள், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள குளியலறையை கூட, விளம்பர பேனர்கள் கொண்டு மறைவிடம் அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். வருமானமில்லாத காரணத்தால், அன்றாட உணவிற்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அயலவர்கள், தங்களால் இயன்ற சிறு உதவிகளை செய்து வருகின்றனர். இருப்பினும், இது நிரந்தரத் தீர்வாக இல்லை. இத்தகைய துயரமான சூழ்நிலையிலும், மூன்று குழந்தைகளும் கல்வி மீது உள்ள ஆர்வத்தை இழக்காமல் படித்து வருவது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இந்த நிலையில், தாய்–தந்தையை இழந்த இந்த மூன்று குழந்தைகளின் மேல்படிப்பிற்கு தமிழக அரசு வழிகாட்டி உதவ வேண்டும், மேலும் பாதுகாப்பான வாழ்க்கை வாழ வீடு கட்டித் தர வேண்டும் என அக்கம்பக்கத்தினர் மற்றும் கிராம மக்கள், தமிழ்நாடு அரசுக்கும், மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment