மன்னார்குடி — நவம்பர் 21
திருவாரூர் மாவட்டம் காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெண் தொழிலாளர்கள் பாரம்பரிய கிராமியப் பாடல்களைப் பாடியபடி வயல்களில் நடவு பணியில் ஈடுபடுவது அனைவரையும் கவர்கிறது.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் குறுவை, தாளடி, சம்பா என மூன்று பருவங்களில் சாகுபடி செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. 2025–26 பருவத்திற்காக வேளாண்மைத் துறை 1.70 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயித்த நிலையில், சம்பா சாகுபடி பணிகள் கடந்த சில நாட்களாக முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்பாக தாளடி பருவ நடவு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. குறிப்பாக மன்னார்குடி அருகே உள்ள ராமபுரம் கிராமத்தில், பெண் விவசாயத் தொழிலாளர்கள் உடல் சோர்வை தணிக்கவும், பணியின் சுறுசுறுப்பை பேணவும் கிராமிய மக்கள் இசைப் பாடல்களைப் பாடிக் கொண்டே வயலிறங்கி பணியாற்றுவது பாரம்பரியத்தின் அழகை வெளிப்படுத்துகிறது.
பாடலின் லயத்தோடு ஒத்த நடையில் தண்ணீரில் நின்று நடவு செய்கின்ற இந்த பெண்களின் உணர்ச்சி மிகுந்த உழைப்பை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

No comments:
Post a Comment