நீடாமங்கலம் — நவம்பர் 21
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட விழல்கோட்டை ஊராட்சியில் உள்ள இணைப்பு நடைபாலம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால், அப்பகுதி பொதுமக்கள் உயிர் அச்சத்தில் நாள்தோறும் பயணித்து வருகின்றனர்.
விழல்கோட்டை மற்றும் தேவங்குடி கீழ்பாதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏழை, நடுத்தர மக்கள், விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கோரையாற்றை கடக்கும் இந்த நடைபாலத்தைப் பயன்படுத்தி அன்றாட பணிகளுக்குச் சென்று வருகின்றனர்.
பல ஆண்டுகளாக இந்த பாலம் பழுதடைந்து சிதிலமடைந்து வந்த நிலையிலும், கீழ்ப்பகுதி மற்றும் இருபுற பாதுகாப்புத் தடுப்புகள் உடைந்து காணப்படுவதால், உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் மக்கள் கட்டாயம் இந்தப் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவ–மாணவிகள், முதியவர்கள், மாற்றுதிறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் தினசரி உயிர் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.
கிராம மக்கள் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மழைக்காலத்தில் நிலைமை மேலும் ஆபத்தாக மாறியுள்ளது.
அப்பகுதி மக்களின் கோரிக்கை:
-
பாலத்தை உடனடியாக தற்காலிகமாக சீரமைத்து பாதுகாப்பாக மாற்ற வேண்டும்
-
மழைக்காலம் முடிந்ததும் நிரந்தர தீர்வாக பழைய பாலத்தை இடித்து புதிய நடைபாலம் அமைக்க வேண்டும்
-
மக்கள் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் மிக விரைவில் அரசு தலையிட வேண்டும்
எனத் தாழ்மையுடன் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment