மன்னார்குடி, நவம்பர் 06 -
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரர் அபினேஷ் மோகன்தாஸ், பஹ்ரைன் நாட்டில் அக்டோபர் 19 ஆம் தேதி தொடங்கிய ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி, 18 வயதுக்குட்பட்டோர் ஆண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.
இந்த சாதனை மூலம் அபினேஷ் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரின் சாதனையை பாராட்டி தமிழக அரசு ரூ.25 லட்சம் பரிசுத் தொகை அறிவித்து கௌரவித்தது. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சொந்த ஊரினரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மன்னார்குடியில் உள்ள தரணி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் எஸ். காமராஜ் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தங்கப்பதக்கம் வென்ற அபினேஷுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கி கௌரவித்தனர். விழாவில் பள்ளி மாணவர்கள் அபினேஷை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அபினேஷ் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.

No comments:
Post a Comment