மன்னார்குடி, நவம்பர் 06-
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முக்குலத்து புலி கட்சியின் நிறுவனர் ஆறு சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “கோயம்புத்தூரில் கல்லூரி மாணவி ஒருவர் தனது நண்பருடன் விமான நிலையம் பின்புறம் பேசிக் கொண்டிருந்தபோது, மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் அந்த இளைஞரை தாக்கி, மாணவியிடம் பாலியல் வன்கொடுமை நடத்தியுள்ளது. தற்போது அந்த மாணவி பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அடிக்கடி இத்தகைய பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுவதற்கு, காவல்துறையின் தளர்வான நடவடிக்கையே காரணம். குற்றவாளிகளை கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்காத காவல்துறை மற்றும் திமுக அரசு மீது முக்குலத்து புலி கட்சி கடும் கண்டனம் தெரிவிக்கிறது,” என்றார்.
மேலும் அவர் கூறியதாவது: “இந்த வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இவர்கள் உண்மையான குற்றவாளிகளா என்பது சந்தேகமாக உள்ளது. உண்மையான குற்றவாளிகளை காவல்துறை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.
திருட்டு சம்பவங்களில் துப்பாக்கி சூடு நடத்தும் காவல்துறை அதிகாரிகள், இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபட்டவர்களையும் என்கவுண்டர் செய்ய துணிவு காட்ட வேண்டும். பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்தால், காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்,” என்று ஆறு சரவணன் எச்சரித்தார்.

No comments:
Post a Comment