மன்னார்குடி அருகே ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்து பல லட்சத்திற்கு விற்பனை செய்து வருவதால் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 2 July 2024

மன்னார்குடி அருகே ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்து பல லட்சத்திற்கு விற்பனை செய்து வருவதால் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் கர்ணாவூர் ஊராட்சி.   இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பாமணியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளி ஆனது மிக குறுகிய பரப்பளவு கொண்ட இடத்தில் குறிப்பாக நீடாமங்கலம் ,ரிஷியூர்  சாலை மார்க்கத்தில் சாலையையொட்டி அமையப்பெற்று அப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு சத்துணவு கூடத்துக்கு இடவசதி இல்லாத நிலையில் வேறு இடத்தில் உணவு சமைத்து தினசரி பள்ளிக்கு வாகனம் மூலம் கொண்டுவந்து மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  


மேலும் மாணவ மாணவியர்களுக்கு தேவையான விளையாட்டு மைதானம், முதலான எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இப்பள்ளியில் செய்து தர முடியாத அளவிற்கு இடவசதியின்றி பள்ளி செயல்பட்டு வருகிறது. 

இதுகுறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை நிர்வாகம் சம்பந்தப்பட்ட கர்ணாவூர் ஊராட்சி மன்றத்தலைவரும் திமுக கட்சியை சேர்ந்தவருமான சாரதி சரவணனிடம் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிதாக பள்ளி கட்டிடம் கட்டிட ஏதுவாக இடத்தினை தேர்வு செய்ய பரிந்துரைத்தது. 


இதனை கருத்தில் கொண்டு ஊராட்சி மன்ற நிர்வாகம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் அனைத்து வசதிகளையும்  ஒன்றாக கொண்ட கட்டமைப்புகளை உருவாக்கி பள்ளி மாணவ மாணவியர்கள் நலனை பாதுகாத்திடும் வகையில்  இவ் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளங்குழி என்ற இடத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டிட சுமார் 5 ஏக்கர் நிலத்தினை ஒதுக்கி தந்தது. 


புதிய பள்ளி கட்டிடம், விளையாட்டு மைதானம் மற்றும் கர்ணாவூர் கிராம மக்களுக்கான பூங்காவிற்க்கு ஒதுக்கப்பட்ட இடம் என 5 ஏக்கருக்கு மேற்பட்ட இடத்தினை மன்னார்குடி மத்திய ஒன்றியத்தின் திமுக செயலாளர் மற்றும் அவரது ஆதரவாளர்களான ஒன்றிய திமுக அவைத்தலைவர்  நடராஜன், ஒன்றிய பிரதிநிதிகள் செல்வகுமார் உள்ளிட்டோர் ஆக்கிரமித்து 20க்கும் மேற்பட்ட இடங்களில் கொட்டகை அமைத்து பல லட்சத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர். 


இது சம்மந்தமாக சம்மந்தப்பட்ட கர்ணாவூர் திமுக ஊராட்சி மன்றத்தலைவரான சாரதி சரவணன் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜாவிடம் நேரில் சந்தித்து திமுக ஒன்றிய செயலாளர் மற்றும் நிர்வாகிகள்  ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளதை ஆதாரங்களுடன் பட்டியலிட்டு புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் தங்களது ஊராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு குறித்து கர்ணாவூர் ஊராட்சி மன்றத்தலைவர் சாரதி சரவணன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வரும் போதிலும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருப்பது ஆளும் திமுக கட்சியின் நிர்வாகிகள் என்பதால் அரசு அதிகாரிகளும் மவுனம் சாதித்து வருகின்றனர். 


இது சம்பந்தமாக திமுகவை சேர்ந்த கர்ணாவூர் ஊராட்சி மன்றத் தலைவர் சாரதி சரவணன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் பாமணி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் நலன் கருதி அவர்களுக்காக புதிய பள்ளி கட்டிடம் கட்டிட ஊராட்சி மன்ற நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒன்றிய திமுக நிர்வாகிகள் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி உடனடியாக புதிதாக பள்ளிக் கட்டிடம் கட்டிட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார். 


மன்னார்குடி மத்திய ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை அத்துமீறி ஆக்கிரமிப்பு விற்பனை செய்து வருவதை அக்கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்றத்தலைவரே வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளதாக திமுக கட்சி வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad