பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் வாக்கு கேட்டு சுற்றுப்பயணம் சென்ற போது, ராஜ கோபாலபுரத்தை சேர்ந்த திமுக மாவட்ட பிரதிநிதி பாசறை டி.ராஜேந்திரன் தரப்பினருக்கும், நெடுவாக்கோட்டை யைச் சேர்ந்த திமுக பொதுக்குழு உறுப்பினர் தெ.காஞ்சித்துரை தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ச.முரசொலி, புதன்கிழமை மன்னார்குடி உள்ளிட்ட பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் ராஜகோபாலபுரம் பகுதியை நோக்கி ஜீப்பில் சென்று கொண்டிருந்தார்.
உடன் சென்ற காஞ்சிதுரை உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் 10 கார்களில் ஆயுதங்களுடன் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மன்னார்குடி டிஎஸ்பி ஏ.அஸ்வத் ஆண்டோ தலைமையிலான போலீசார் தென்பாதியில் அவர்கள் சென்ற கார்களை மறித்து, அனைவரையும் தலையாமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் 10 வாகனங்களில் வந்த காஞ்சித்துரை ஆதரவாளர்களை எச்சரித்து அனைவரையும் திருப்பி அனுப்பினர் .
No comments:
Post a Comment