

குறுவை சாகுபடிக்காக அரசின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்டு திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நேரடி விதைப்பு பணிகளை மேற்கொண்டனர். குறிப்பாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து மன்னார்குடி தாலுக்காவிற்கு உட்பட்ட கோரையாற்று பாசன பரப்பான வாட்டார், நல்லூர், பைங்காட்டுர், வாலிஓடை, களப்பால், வேதபுரம், அக்கரைகோட்டகம், புத்தூர், வெங்கத்தான்குடி, கோட்டகம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30,000 ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் வகையில் நேரடி விதைப்பு பணிகளை விவசாயிகள் ஆர்வமுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கொண்டனர்.
ஆனால் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் 15 நாட்களை கடந்தபோதிலும் கோரையாற்றில் சரிவர பாயாத காரணத்தால் வாட்டார், மீனம்பநல்லூர் முதலான கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நேரடி விதைப்பு செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் வயலில் இறங்கி தமிழக அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கோரையாற்றில் முழுமையாக தண்ணீர் வராததால் விவசாயிகள் குளத்தில் உள்ள தண்ணீரை பம்பு செட் மூலம் வயல்களில் பாய்த்து வருகின்றனர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் குறுவை சாகுபடி பணிக்கு கிடைக்காததால் கோரையாற்று பாசனத்திற்கு உட்பட்ட 30,000 ஏக்கர் விளைநிலங்களமாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக கோரையாற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment