தென் கொரியா பல்கலைக்கழகங்களில் ஆய்வு மேற்கொண்ட தமிழக மாணவர்களுக்கு திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் பாராட்டு விழா. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 3 February 2026

தென் கொரியா பல்கலைக்கழகங்களில் ஆய்வு மேற்கொண்ட தமிழக மாணவர்களுக்கு திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் பாராட்டு விழா.


திருவாரூர், பிப். 03:


தமிழ்நாட்டில் நான் முதல்வன் திட்டம் மூலம் கல்லூரி மாணவ–மாணவிகள் வெளிநாடுகளில் உயர்தர பல்கலைக்கழகங்களில் ஆய்வு மற்றும் பயிற்சி மேற்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்த கல்வியாண்டில் நான் முதல்வன் தேர்வு மற்றும் பயிற்சிகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 35,000 மாணவர்களில் 25 பேர் வெளிநாட்டு ஆய்வு பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர்.


இந்த 25 மாணவர்களில், திருவாரூரில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்ட திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவர்கள் தேர்வாகியது குறிப்பிடத்தக்கது.


தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 15 நாட்கள் தென் கொரியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து ஆய்வறை செய்முறைப் பயிற்சி, தொழில்நுட்பக் கற்றல், ஆராய்ச்சி முறைகள் உள்ளிட்ட பல்வேறு திறன்களை கற்றுக்கொண்டனர்.


திருவிக அரசு கலைக் கல்லூரியைச் சேர்ந்த கார்த்திகா, முருகதாஸ், பரத்ராஜ், நிரேஷ், சத்ரியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், சத்ரியன் என்பவர் சுகாதார ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்ற காரணத்தால் தென் கொரியா பயணத்தில் கலந்து கொள்ளவில்லை.


தென் கொரியா ஆய்வு பயணத்தை முடித்து தமிழகம் திரும்பிய நான்கு மாணவர்களுக்கு, கல்லூரி முதல்வர் சுஜாரிதா மாக்டலின் தலைமையில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு சால்வை அணிவித்து, சிறப்பு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உலகத் தர பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற வாய்ப்பு வழங்கிய தமிழ்நாடு அரசுமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு மாணவர்கள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள் மற்றும் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad