இந்த மாரத்தான் போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஆண், பெண் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த ஓட்டப் போட்டியில், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் துரித உணவுகளால் ஏற்படும் உடல், மன பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீரர்கள் முழு உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாரத்தான் போட்டி ஒருங்கிணைப்பாளர் விஜய், கிராமப்புற பகுதிகளில் விளையாட்டு வசதிகள் இல்லாத நிலை குறித்து கவலை தெரிவித்தார்.
தமிழக அரசு ஒவ்வொரு ஒன்றியத்திலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் என அறிவித்திருந்தாலும், ஏற்கனவே மைதானங்கள் உள்ள பகுதிகளிலேயே தற்போது பணிகள் நடைபெற்று வருவதாகவும், வலங்கைமான், நீடாமங்கலம் உள்ளிட்ட கிராமப்புறங்களில் ஒரு விளையாட்டு மைதானம் கூட இல்லாத நிலை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விளையாட்டு மைதானங்கள் இல்லாத காரணத்தினால், விவசாயத் தொழிலாளர்களின் பிள்ளைகள் சாலைகளில் ஓடி பயிற்சி மேற்கொண்டு, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று வருவதாகவும், இதுவரை இந்தப் பகுதிகளைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இப்பகுதியில் குறைந்தபட்சம் 200 மீட்டர் தடகளப் பயிற்சி பாதை (ட்ராக்) அமைத்து வழங்கப்பட்டால், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறும் வீரர்களை உருவாக்க முடியும் என்றும், இதற்காக தமிழக முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சி, இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தையும், போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வையும் ஒருங்கே உருவாக்கியதாக பொதுமக்கள் பாராட்டினர்.
.jpg)
No comments:
Post a Comment