விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள் – வலங்கைமான் பகுதி விவசாயிகள் அவசர நடவடிக்கை கோரிக்கை. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 8 December 2025

விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள் – வலங்கைமான் பகுதி விவசாயிகள் அவசர நடவடிக்கை கோரிக்கை.


திருவாரூர் – டிசம்பர் 08:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்ச் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் காட்டுப்பன்றிகள் வயல் பகுதிகளுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது வழக்கமான பிரச்னையாக இருந்தபோதிலும், இாண்டு இது கடுமையாக அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


காட்டு பன்றிகள் கூட்டமாக வயல்களில் நுழைந்து, நெற்பயிர்கள் மற்றும் கரும்பு சாகுபடியை முழுமையாக அள்ளிச் சென்று அழித்து வருவதால், விவசாயிகள் மிகுந்த பொருளாதார இழப்புக்கு உள்ளாகி வருகின்றனர். பலர் இரவு நேரங்களில் தங்கள் வயல்களுக்கு செல்வதற்கே பயப்படுகின்றனர்.


இதுகுறித்து விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து புகாரளித்து வந்தாலும், இதுவரை பன்றிகளைப் பிடிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். ஏற்கனவே கடந்த வாரம் பெய்த கனமழையால் நெற்பயிர்கள், கரும்பு சாகுபடி பெரிதும் சேதமடைந்துள்ள நிலையில், தற்போது காட்டு பன்றிகள் தொல்லை மேலும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


“எங்களின் நெல், கரும்புப் பயிர்கள் முழுவதுமாக அழிந்து போகின்றன. வருவாய் இல்லை, கடன் சுமை அதிகரிக்கிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக காட்டு பன்றிகளைப் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.


விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு வலங்கைமான் சுற்றுவட்டார வயல் பகுதிகளில் சுற்றித் திரியும் காட்டு பன்றிகளைப் பிடிக்கும் அவசர நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

No comments:

Post a Comment

Post Top Ad