திருத்துறைப்பூண்டி – டிசம்பர் 08:
திருத்துறைப்பூண்டி–சென்னை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய மாநில நெடுஞ்சாலை, திருவாரூர்–பேரளம்–மயிலாடுதுறை வழியாக பல்லாயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் பயன்படுத்தும் வழிப்பாதையாக உள்ளது. இந்த நெடுஞ்சாலையின் சேந்தமங்கலம் இபி காலனி பகுதியில் சாலை மிக மோசமாக பழுதடைந்து, வாகனங்கள் இயக்க முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டு வருகிறது.
சாலை பழுதை சீரமைக்க பலமுறை திருவாரூர் நெடுஞ்சாலைத் துறையிடம் பொதுமக்கள் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில் இன்று மாலை, பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்து வீடு திரும்பிய ஒரு பெண்மணி, இபி காலனி பகுதியில் உள்ள பள்ளத்தில் கால்வைத்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார். இதில் குழந்தைகளும் பயமடைந்தனர்.
சம்பவம் பரவியதும், வெகுண்டெழுந்த சேந்தமங்கலம் பகுதி பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து, அந்த வழியாக சென்ற பேருந்தை மறித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திடீரென நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடிவிட்டதால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
பின்னர் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சாலையை விரைவாக சீரமைப்போம் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

No comments:
Post a Comment