திருவாரூர் – டிசம்பர் 08:
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பூதமங்கலம் தர்காவில், ஹஜ்ரத் மஹ்சூம் சாஹிப் வலியுல்லாஹ் மற்றும் ஹஜ்ரத் பக்கீர் மஸ்தான் வலியுல்லாஹ் அவர்களின் புனித கந்தூரி விழா மிகுந்த அனுசரணையுடனும் பக்தி பரவசத்துடனும் நடைபெற்றது.
மத நல்லிணக்கத்தையும் மனிதநேயம் உயர்த்துவதிலும் தமிழ்நாட்டு தர்க்காக்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. உலகின் பல்வேறு நாடுகளில் பயணம் செய்து சாதி–மத பேதமின்றி அனைவருக்கும் அருளாசி வழங்கி, மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளுக்குப் பார்வை மட்டுமே கொண்டு நன்மை செய்த ஹஜ்ரத் மஹ்சூம் சாஹிப் மற்றும் ஹஜ்ரத் பக்கீர் மஸ்தான் ஆகியோர் இறுதியில் பூதமங்கலம் பகுதியில் தங்கி, அங்குதான் அடக்கமானார்கள். நாகூர் ஆண்டவர்களுடனும் இவர்களுக்கு தனித்துவமான ஆன்மீக மரியாதை வழங்கப்படுகிறது.
இந்த புனித கந்தூரி விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, மின்னொளி அலங்காரத்துடன் நடைபெற்ற சந்தனக்கூடு ரத ஊர்வலம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. பூதமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் வழியாக ஊர்வலம் சென்று, அதிகாலை மீண்டும் மகான் அடக்கத்தலத்தை அடைந்து, பின்னர் சமாதிகளின்மேல் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழா வானவேடிக்கை, மேள தாளங்கள், மாடு – மயில் ஆட்டம், மாட்டு வண்டி ஊர்வலம் ஆகியவற்றால் மேலும் சிறப்பிக்கப்பட்டது. இதில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரையும் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மகான்களின் அருளைப் பெற்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

No comments:
Post a Comment