திருவாரூரில் சிஐடியு சார்பில் மறியல் போராட்டம்; தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தல். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 23 December 2025

திருவாரூரில் சிஐடியு சார்பில் மறியல் போராட்டம்; தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தல்.


திருவாரூர், டிச. 23:

தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்றிய ஒன்றிய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் இந்திய தொழிற்சங்க மையம் (CITU) சார்பில் இன்று மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, திருவாரூரில் தலைமை தபால் நிலையம் முன்பு சிஐடியு சார்பில் மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த மறியல் போராட்டத்திற்கு சிஐடியு மாநில துணைச் செயலாளர் ஜெயபால் தலைமையிலானது. போராட்டத்திற்கு முன்னதாக, தொழிலாளர்கள் திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு, பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று, தலைமை தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.


போராட்டத்தின் போது, புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்தால், வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும், தொழிலாளர் நீதிமன்றங்கள் மூடப்படும் உள்ளிட்ட தொழிலாளருக்கு விரோதமான பல்வேறு அம்சங்கள் இருப்பதாக சிஐடியு நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். மேலும், நூறு ஆண்டுகளாக போராடி பெற்ற தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், உடனடியாக இந்த சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து, பின்னர் தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இந்த போராட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் அனிபா உள்ளிட்ட ஏராளமான தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக, திருவாரூர் நகரப் பகுதியில் சில நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

No comments:

Post a Comment

Post Top Ad