ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற வடுவூர் வீரர் அபினேஷ் – நீடாமங்கல நீலன் பள்ளியில் பாராட்டு விழா. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 5 November 2025

ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற வடுவூர் வீரர் அபினேஷ் – நீடாமங்கல நீலன் பள்ளியில் பாராட்டு விழா.


நீடாமங்கலம், நவம்பர் 5:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த கபடிவீரர் அபினேஷ் மோகன்தாஸ், பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் (Asian Youth Games) இந்திய அணிக்காக விளையாடி தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். இந்த போட்டிகள் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி பஹ்ரைனில் தொடங்கிய நிலையில், 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் அபினேஷ் சிறப்பாக விளையாடி, இந்திய அணிக்கு தங்கம் பெற்றுத் தந்தார்.

அவரது வெற்றிக்கு தமிழ்நாடு அரசு, அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வடுவூர் மேல்பாதி கிராம மக்கள் அனைவரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். இதையொட்டி, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள நீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தாளாளர் நீலன் அசோகன் தலைமையில், பள்ளி செயலாளர் நீலன் சுரேன், முதல்வர் குணசீலன் முன்னிலையில், தங்கப்பதக்கம் வென்ற கபடிவீரர் அபினேஷ் மோகன்தாஸை வரவேற்று, ரூ.10,000 பணப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.


மேலும், பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் அபினேஷ் மோகன்தாஸ் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கினார். அவர், தன்னுடைய தங்கப்பதக்கத்தை மாணவர்களுக்கு காண்பித்து,

“நான் பெற்ற வெற்றி உங்களுக்கும் ஒரு ஊக்கமாக இருக்கட்டும். உழைத்தால் எல்லாம் சாத்தியம்,”
என்று கூறி மாணவர்களை ஊக்குவித்தார்.


இந்த பாராட்டுவிழாவில் வடுவூர் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் பொன். கோவிந்தராஜ், வடுவூர் ஏஎம்சி கபடி கழகத்தின் ஞானஸ்கந்தன், சோழநாடு உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் செந்தில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு உற்சாகமாக பாராட்டினர்.

© தமிழககுரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

No comments:

Post a Comment

Post Top Ad