திருவாரூர், அக். 23 -
திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படக்கூடிய பேரிடர் நிலைமைகளை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள தமிழக அரசு கணிப்பாய்வு அலுவலராக ஆனந்த் ஐ.ஏ.எஸ். அவர்களை நியமித்துள்ளது.
இதையடுத்து இன்று அவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் உடன் இணைந்து மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டனர். ஆய்வின் ஒரு பகுதியாக, திருவாரூர் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேரிடர் மேலாண்மை பணிகள் மற்றும் உபகரணங்களை கணிப்பாய்வு அலுவலர் ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள், சவுக்கு மரம், போக்லைன் உள்ளிட்ட தளவாடப் பொருட்களைப் பரிசோதித்து, மழை மற்றும் வெள்ளம் போன்ற அவசரநிலைகளில் உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வில் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்து, கோட்டாட்சியர் சத்யா, வட்டாட்சியர் ஸ்டாலின், மக்கள் தொடர்பு அதிகாரி செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment