விவசாயிகளிடம் இருந்து உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய, தமிழக அரசு திருவாரூர் மாவட்டத்தில் 350க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நெல் மூட்டைகள் பல்வேறு கட்டங்களாக அரசு அரவை ஆலைகளுக்கும் சேமிப்பு கிடங்குகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நெல் மூட்டைகள் தேக்கம் இன்றி விரைவாக பரிமாறப்பட வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன் பேரில், நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகிலுள்ள கொள்முதல் நிலையங்களில் இருந்து சுமார் 50,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள், மொத்தம் 156 லாரிகளில் ஏற்றி கொண்டு வரப்பட்டன. பின்னர் அவை சரக்கு ரயில்கள் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இப்பணிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, “நெல் மூட்டைகள் சேதமடையாமல் பாதுகாப்பாகவும், தாமதமின்றி இயக்கப்பட வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அத்துடன், நெல் மூட்டைகள் ஏற்றும் மற்றும் ரயிலில் மாற்றும் பணிகள் சிறப்பாக நடைபெறுவதை ஆட்சியர் ஆய்வு செய்து, அதற்கான தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.
.jpg)
No comments:
Post a Comment