திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 40,000 மெட்ரிக் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு – மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் பேட்டி. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 26 October 2025

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 40,000 மெட்ரிக் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு – மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் பேட்டி.


திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமையும் இயங்குவதை மாவட்ட ஆட்சியர் வ. மோகனசந்திரன், இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து, நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் “விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும்” என ஆணையிட்டார்.


அதனைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேரடி கொள்முதல் செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் திருச்சி மற்றும் வெளிமாவட்ட அரவை மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


இந்நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்களுடன் ஆட்சியர் உரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன், “திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் இரவு 8 மணி வரை விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் நடைபெற்று வருகிறது. தற்போது குறுவை அறுவடைப் பணிகள் 83 சதவீதம் நிறைவடைந்துள்ளன. கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் 96 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதுடன், மொத்தம் 1.5 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என தெரிவித்தார்.


மேலும், “இன்னும் 10 நாட்களில் குறுவை அறுவடை முழுமையாக நிறைவடையும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் அரவைக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன,” என மாவட்ட ஆட்சியர் வ. மோகனசந்திரன் கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad