திருவாரூர், அக்.28 -
திருவாரூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்த ஆய்வை மத்திய குழுவினர் இன்று மேற்கொண்டனர்.
இந்த ஆண்டின் குறுவை பருவத்தில் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 1.90 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக பெய்த மழையால், அறுவடை செய்யப்பட்ட நெல்லில் அதிக ஈரப்பதம் ஏற்பட்டது. மேலும், சாக்கு மற்றும் சணல் பற்றாக்குறை, கிடங்கு வசதியின்மை ஆகிய காரணங்களால் பல கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் ஆயிரக்கணக்கில் தேங்கியுள்ளன.
தற்போது அரசு 17 சதவீத ஈரப்பதமுள்ள நெல்லையே கொள்முதல் செய்கிறது. ஆனால், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 22 சதவீதம் வரை ஈரப்பதம் கொண்ட நெல்லையும் வாங்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையை மதிப்பாய்வு செய்ய இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் பி.கே. சிங் தலைமையிலான மத்திய குழு இன்று திருவாரூர் மாவட்டத்தின் கோயில்வெண்ணி, ஊர்குடி, கொட்டாரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டது. குழுவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் அண்ணாதுரை, தொழில்நுட்ப அலுவலர்கள் ஷோபிட்ஷிவாஜ், ராகேஷ்பராலா உள்ளிட்டோர் இணைந்தனர்.
அவர்கள் நெல் மாதிரிகளை சேகரித்து, கொள்முதல் செய்ய வந்த விவசாயிகளிடம் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தனர். ஆய்வின்போது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்தரன் பங்கேற்று, மாவட்டத்தின் தற்போதைய நிலை குறித்து மத்திய குழுவினரிடம் விரிவாக விளக்கமளித்தார்.
.jpg)
No comments:
Post a Comment