முதலமைச்சரின் மௌனத்தால் காவிரி உரிமை பறிபோகிற பேராபத்து உள்ளது - பி.ஆர்.பாண்டியன் கண்டனம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 6 July 2024

முதலமைச்சரின் மௌனத்தால் காவிரி உரிமை பறிபோகிற பேராபத்து உள்ளது - பி.ஆர்.பாண்டியன் கண்டனம்.


தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது  தமிழ்நாட்டில் காவிரி டெல்டா வரலாறு காணாத வறட்சியை சந்தித்து  வருகிறது. 

குறுவையை முற்றிலும் இழந்த நிலையில் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாக உள்ளது.  கோடை சாகுபடி பயிர்கள் பருவமாறி பெய்த பேரழிவு பெருமழையால் விவசாயிகள் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளனர்.  இந்நிலையில் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. 


காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட அனைத்து அணைகளும் 90% நீர் நிரம்பிவிட்டது. காவிரியில் துணை நதிகள் அனைத்தும் வெள்ளைக்காடாக காட்சி அளிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகம் தர மறுக்கிறது. ஜூன் ஜூலை மாதத்திற்கு மட்டும் 44 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டும். 


இதனைப் பெற்று விட்டால் ஒருபோக சம்பா சாகுபடி பணிகளை பாதுகாத்து விட முடியும் பிற்பகுதியில் தென்மேற்கு பருவமழை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், உரிய நீரை உடனடியாக பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.


மேகதாட்டு அணை கட்டுவதற்கு கோரிக்கை மனுவை பிரதமரிடம் கர்நாடக முதலமைச்சர் சித்ராமையா நேரில் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பிரதமர் சம்பந்தப்பட்ட துறை அமைச்சகங்களோடு கலந்து பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உத்தரவாதம் அளித்துள்ளதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.


இச்செயல் உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் ஆகும். குறிப்பாக மேகதாட்டு அணை கட்டுவதற்கு கோரிக்கை மனுவை பிரதமர் சித்தராமையாவிடம் பெற்றது சட்டவிரோதமானது, மட்டுமின்றி உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். தமிழ்நாடு முதலமைச்சர் இது குறித்து வாய் திறக்கவுமில்லை, மறுப்பும்  தெரிவிக்கவில்லை.  இதனால் காவிரியில் பெற்ற உரிமைகள் பறிபோகும் பேராபத்தை ஏற்பட்டு உள்ளது. 


முதல்வர் மௌனத்தை கலைத்துவிட்டு போர்க்கால அடிப்படையில் காவிரி நீரை பெற்று சம்பா சாகுபடி மேற்க்கொள்வது குறித்து உரிய விளக்கம் அளிக்க முன்வர வேண்டும்.  மேகத்தாட்டு அணை கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்துவதற்கும், ராசிமணல் கட்டுமான பணி தொடங்குவதற்கும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.


- திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 


No comments:

Post a Comment

Post Top Ad