மேகதாது அணை தமிழ்நாடு அரசின் துரோகத்தை கண்டித்தும். மத்திய அரசு ஆணையத்தின் முடிவை நிராகரிக்க வலியுறுத்தி மார்ச் 15ல் திருவாரூரில் உண்ணாவிரதம் பிஆர்.பாண்டியன் அறிவிப்பு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 6 March 2024

மேகதாது அணை தமிழ்நாடு அரசின் துரோகத்தை கண்டித்தும். மத்திய அரசு ஆணையத்தின் முடிவை நிராகரிக்க வலியுறுத்தி மார்ச் 15ல் திருவாரூரில் உண்ணாவிரதம் பிஆர்.பாண்டியன் அறிவிப்பு.


தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு அவசர கூட்டம் திருவாரூர் தனியார் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பின் கூட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பொதுச் செயலாளர் பிஆர் பாண்டியன் தெரிவித்ததாவது: மத்திய அரசு டெல்லியில் போராடும் விவசாயிகளை அழைத்துப் பேச மறுப்பது கண்டிக்கத்தக்கது. கொடுத்த வாக்குறுதி அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலைக்காண நிரந்தர சட்டம். எம் எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை நிறைவேற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசு நிறைவேற்றாமல் காலம் கடகடத்துகிறது. 


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் அதனை காரணம் காட்டி விவசாயிகள் போராட்டத்தை பிளவுபடுத்த முயற்சிக்கிறது. உடனடியாக அழைத்து பேசி தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழ்நாட்டில் 100 இடங்களில் வரும் மார்ச் 10ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்.

காவிரி பிரச்சனையில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து துரோகம் இழைக்கிறது. 2 ஆண்டு காலமாக கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றுவதும், மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சி மேற்கொள்வதும் சட்ட விரோதம் என தெரிந்தும் தொடர்கிறது. இதனை தட்டிக் கேட்க வேண்டிய திமுக அரசு முதலமைச்சர் வாய் மூடி மௌனியாக இருப்பது தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தப் போகிறது. 


காங்கிரஸ் கட்சிக்கு திமுகவின் ஆதரவு தேவை என்றாலும் கர்நாடகாவின் உரிமை பிரச்சனையில் ஆளக்கூடிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உறுதியாக இருக்கிறார். அதற்கான சட்ட நடவடிக்கைகளை அவர் மேற்கொள்கிறார். சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றுகிறார். ஆனால் தமிழ்நாட்டை ஆளக்கூடிய முதலமைச்சர் அதற்கு மறுப்பு தெரிவிப்பதற்கோ, கர்நாடகாவிற்கு இணையான வகையில் எதிர்ப்பை பதிவு செய்வதற்கோ, சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கோ முன் வராததால் பெற்ற உரிமை பறிபோகும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. 


குறிப்பாக மேகதாது அணை கட்டுமானத்திற்கு ஆணையம் எடுத்த முடிவை நிராகரிக்க கோரி தீர்மானம் நிறைவேற்ற திமுக அரசு சட்டமன்றத்தில் மறுத்துவிட்டது.இதன் மூலம் பெற்ற உரிமையை திமுக பறிகொடுக்கிறதோ? என்கிற அஞ்சத் தோன்றுகிறது.  எனவே உடனடியாக மேகதாது அணை கட்டுமானத்தை ஆதரிக்கும் வகையில் மேலாண்மை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிராகரிக்க மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு காவிரிப் பிரச்சினையில் துரோகம் இழைப்பதை கண்டித்தும் வரும் மார்ச் 15ஆம் தேதி காவிரி டெல்டா தழுவிய அளவில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை திருவாரூரில் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். 


நெய்வேலியில் அணு மின் உற்பத்தி நிலையம் அமைக்க உள்ளதாக அதன் இயக்குனர் தெரிவித்திருப்பது சட்டவிரோதமானது. மத்திய அரசின் அனுமதி பெற்று அறிவித்துள்ளாரா? இல்லை தமிழக அரசே ஒப்புதல் கொடுத்துள்ளதா? அணுமின் நிலையங்கள் அமைக்க வேண்டுமானால் உலகலாவிய விவாதத்திற்கு உட்பட்டது.மத்திய அரசு பாராளுமன்றத்தில் இது குறித்து தெரிவித்திருக்க வேண்டும். 


தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் விவாதித்திருக்க வேண்டும். இந்நிலையில் பொதுத்துறை நிறுவனமான நெல்வேலி நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பதற்கு யார்? அதிகாரம் கொடுத்தது. தமிழ்நாட்டில் பேரழிவுத் திட்டங்களை அவர்கள் விருப்பத்திற்கு அறிவிப்பதற்கு தமிழ்நாடு அரசு மறைமுகமாக துணை போகிறதோ? என்று சந்தேகம் எழுந்துள்ளது.


இது குறித்தும் முதலமைச்சர் வாய் திறக்காமல் மௌனம் காப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அழிவு பாதைக்கு கொண்டு செல்லும். உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரை பணி நீக்கம் செய்வதற்கு வலியுறுத்த வேண்டும்.கண்டனம் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.காவிரி மட்டுமின்றி பாலாற்றில் அணைக்கட்டும்  ஆந்திரா அரசுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் இதுவரையிலும் எந்த ஒரு மறுப்பையும் தெரிவிக்கவில்லை கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை. 


சிறுவாணியின் குறுக்கே கேரளா சட்டவிரோதமாக அணையை கட்டி முடித்து விட்டார்கள். தமிழ்நாடு அரசு இதுவரையிலும் அது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை இதன் மூலம் நீர் ஆதார பிரச்சனைகள் முழுமையும் பறிபோகும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும் என்ற அஞ்சத்தோடு திமுக அரசினுடைய செயல்பாடுகள் மெத்தனமாக உள்ளது. இதனை வன்மையாக கண்டிப்பதுடன், உரிய நடவடிக்கைகளை அவசரகாலமாக மேற்கொள்ள வலியுறுத்துகிறோம் என்றார்.


கூட்டத்திற்கு புதுச்சேரி மாநில தலைவர்  ராஜேந்திரன் தலைமையற்றார். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எல்.பழனியப்பன் அமைப்பு செயலாளர் நாகை எஸ்.ஸ்ரீதர், மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேட்டங்குடி சீனிவாசன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் எம்.மணி மற்றும் வடக்கு மாவட்ட தலைவர் காவலூர் செந்தில்குமார், திருவாரூர் மாவட்ட பொருளாளர் நடராஜன் .மாநில துணைச் செயலாளர் எம்.செந்தில்குமார், திருவாரூர் ஒன்றிய செயலாளர் அகஸ்டின், தலைவர் அறிவு உயர் மட்டக் குழு உறுப்பினர் குடவாசல் அசோகன், முன்னதாக திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன் அனைவரையும் வரவேற்றார். உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


-செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad