திருவாரூர் நீதிமன்றம் தீர்ப்பை கேட்டதும் ஊராட்சி மன்ற தலைவர் உயர் ரத்த அழுத்தம் என கூறி மருத்துவமனையில் அனுமதி. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 16 February 2024

திருவாரூர் நீதிமன்றம் தீர்ப்பை கேட்டதும் ஊராட்சி மன்ற தலைவர் உயர் ரத்த அழுத்தம் என கூறி மருத்துவமனையில் அனுமதி.


20 கோடி ரூபாய் நில மோசடியில்  ஈடுபட்ட அதிமுக ஒன்றிய தலைவரின் மனைவியும் ஊராட்சி மன்ற தலைவருமான அமுதாவை வரும் 23ஆம் தேதி வரை சிறையில் அடைக்க திருவாரூர் நீதிமன்றம் உத்தரவு. தீர்ப்பை கேட்டதும் உயர் ரத்த அழுத்தம் என கூறி திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றிய தலைவராக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த மனோகரன். இவரது மனைவி அமுதா மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இந்த நிலையில்  மன்னார்குடி பகுதியை சேர்ந்த ஞானாம்பாள் மற்றும் ரோஸ்லின் ஆகியோர் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள  நிலத்தை ஞானாம்பாள் உயிரோடு இருக்கும்போதே இறந்து விட்டதாக போலியான இறப்பு சான்றிதழ் தயாரித்தும், ஆள்மாறாட்டம் செய்தும், மோசடி செய்து நிலத்தை அபகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
 

இது தொடர்பாக மன்னார்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து மன்னார்குடி ஒன்றிய தலைவரும், அதிமுகவை சேர்ந்தவருமான மனோகரன் மனைவியும், சேரன்குளம் ஊராட்சி மன்ற தலைவருமான அமுதா பல மாதங்களாக தலைமறைவாக இருந்தார். காவல்துறை விசாரணையில்  முன்னேற்றம் அடையாததால் இது தொடர்பான வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது.


இந்த நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தார். அதில் அமுதாவை கைது செய்து வழக்கு விசாரணை முடியும் வரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த வேண்டும் என்றும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
 

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமுதா மேல்முறையீடு செய்தார். மேல் முறையீட்டு மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம்  சிபிசிஐடி விசாரணையில் குற்றம் நிரூபணம் ஆகி உள்ளதால் அமுதாவை விசாரணை நீதிமன்றத்தில் மூன்று நாட்களுக்குள்  சரண் அடையும்படி உத்தரவு பிறப்பித்தது.


இதனையடுத்து இன்று திருவாரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அமுதா ஆஜர் ஆனார். இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அமுதாவை வரும் 23ஆம் தேதி வரை சிறையில் அடைக்க திருவாரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி பாலமுருகன் உத்தரவிட்டார்.


தீர்ப்பை கேட்டதும் உயர் ரத்த அழுத்தம் எனக்கூறி அமுதா திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad