இந்தப் பகுதிகளில் ஒன்றிய அரசு, மற்றும் மாநில அரசின் மூலம் பயனாளிகளுக்கு தொகுப்பு வீடு கட்டுதல், அங்கன்வாடி கட்டுதல், பள்ளி கட்டிடம்,சாலை வசதி, சிறு பாலங்கள், குடிநீர் வசதி, மகளிர் சுய உதவி குழு கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பணிகள் தொடர்பாக தினமும் 100-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர்.
இது தவிர ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை, கிராம ஊராட்சித் துறை, இ- சேவை மையங்கள், பொறியியல் பிரிவு என உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் சேதம் அடைந்து மழைக்காலங்களில் கட்டிட மேற்பரப்பில் இருந்து தண்ணீர் கசிகிறது, இதனால் அலுவலகத்தில் உள்ளக் கணினிகள், பதிவேடுகள் சேதமடைகின்றன, மேலும் அவ்வப்போது கட்டிட மேற்கூரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுவது தொடர்கதையாக உள்ளது.
கட்டிடத்தில் எங்கு சென்றாலும் வயர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது, நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்லக் கூடிய அலுவலகத்தில் போதிய கழிப்பறை வசதி இல்லை, பொதுமக்கள் அமர்வதற்கு போதிய இட வசதி இல்லை, திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், வலங்கைமான், திருவாரூர், குடவாசல், நன்னிலம், கொரடாச்சேரி உள்ளிட்ட 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
இவற்றில் வலங்கைமான் அடுத்த நன்னிலம் உள்ள 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. எனவே அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பழுதடைந்த நிலையில் உள்ள வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தை முற்றிலுமாக இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment