திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலின் ஆணி தெப்ப திருவிழா கடந்த 10 தினங்களாக நடைபெற்று வந்தது. இதில் ஒவ்வொரு தினமும் இரவு ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதி உலா நடத்தப்பட்டது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நேற்று திங்கட்கிழமை இரவு ஆசியாவிலேயே மிகப்பெரிய தெப்பக்குளம் ஆன ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா நடைபெற்றது.


பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருந்த தெப்பம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 23 ஏக்கர் பரப்பளவிலான தெப்பக்குளத்தின் மையத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலிலும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு 10 மணி அளவில் துவங்கி இன்று அதிகாலை 3 மணி வரை தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ருக்மணி, சத்தியபாமா தாயார்கள் சமேதராக தெப்பத்தில் எழுந்தருளிய ராஜகோபாலசாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
குளத்தில் நான்கு கரைகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு தெப்ப ஓட்டத்தினை கண்டு ரசித்தனர். இந்த தெப்பதிருவிழாவானது மன்னார்குடி வர்த்தக சங்கத்தினரால் 121 ஆம் ஆண்டாக நடத்தபட்டது.
- செய்தியாளர் தருண்சுரேஷ்.
No comments:
Post a Comment