நிலக்கரி எடுக்கும் திட்டம் , ஆளுநரின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் முக.ஸ்டாலின் புறக்கணிக்க வேண்டும் என மன்னார்குடியில் பி ஆர்.பாண்டியன் வலியுறுத்தல். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 7 April 2023

நிலக்கரி எடுக்கும் திட்டம் , ஆளுநரின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் முக.ஸ்டாலின் புறக்கணிக்க வேண்டும் என மன்னார்குடியில் பி ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்.


தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழ்நாட்டில்  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக விவசாயிகளும் பொதுமக்களும் தீவிரமாக போராடி பேரழிவிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்தை பாதுகாத்தனர். போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம்  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளை அவமதிக்கும் விதத்தில் தமிழக மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக ஆளுநர் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆளுநரின் வரம்பு மீறி பேசுவது  தொடர்வது தமிழக மக்களுக்கு தலைகுனிவை உருவாக்கி இருக்கிறது. 

 

மேலும் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள போது, மாநில அரசின் கருத்தைக் கேட்காமலேயே ஒப்புதலை பெறாமலே கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக நிலக்கரி திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

 

அதற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு, முதலமைச்சர் எழுத்து பூர்வமாக பிரதமருக்கும் கடிதம் எழுதி இரண்டு தினங்கள் கடந்துவிட்டது. இதுவரையிலும் பிரதமர் அலுவலக கடிதம் குறித்து,  தமிழக மக்களின் உணர்வுகளுக்கு சட்டமன்ற  தீர்மானத்திற்கும் மதிப்பளித்து தனது நிலையை தெளிவுபடுத்த முன்வரவில்லை.  


இந்த நிலையில் சென்னையில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பது தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 


எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து, நிலக்கரி திட்டம் குறித்து பதில் அளிக்க மறுக்கும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.


ஏற்கனவே இது போன்ற நடவடிக்கைகளுக்காக தெலுங்கானா, மேற்கு வங்காள முதலமைச்சர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருவதையும் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டின் நலன் கருதி முடிவெடுக்க முன்வர வேண்டும் என தெரிவித்தார் 


- செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad