பல்வேறு துண்டுகளாக அறுக்கப்பட்ட நிலையில், போலீசார் மீட்ட திருடப்பட்ட ஐயப்பன் சிலையை கண்டு கதறி அழுத ஐயப்ப குருசாமி - மாலை அணிவித்து காலில் விழுந்து மரியாதை செலுத்திய நெகிழ்ச்சி சம்பவம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 4 September 2024

பல்வேறு துண்டுகளாக அறுக்கப்பட்ட நிலையில், போலீசார் மீட்ட திருடப்பட்ட ஐயப்பன் சிலையை கண்டு கதறி அழுத ஐயப்ப குருசாமி - மாலை அணிவித்து காலில் விழுந்து மரியாதை செலுத்திய நெகிழ்ச்சி சம்பவம்.


திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட திருமஞ்சன வீதியில் புகழ்பெற்ற பறவை நாச்சியார் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோவிலில் குருக்களாக ஐயப்ப குருசாமி தம்புடு என்கிற முருகேசன் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 23ம் தேதி கோவில் பூட்டை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஒன்றரை அடி உயரமுள்ள  வெண்கலத்திலான ஐயப்பன் சிலை  திருடப்பட்டது.


இது குறித்து கோவில் குருக்கள் தம்புடு என்கிற முருகேசன் புகார் அளித்ததின் பேரில் நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வந்தனர். 


அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் பதிவை கொண்டு புலிவலம் காந்தி நகரை சேர்ந்த சேர்ந்த ராதாகிருஷ்ணன் (30) மற்றும் மன்னார்குடி அருகே  தட்டாங்கோவில் கிராமத்தைச் சேர்ந்த கோபு என்பவரையும் பிடித்து விசாரணை செய்ததில், ஐம்பொன் சிலை என நினைத்து ஐயப்பன் சிலையை திருடியதாகவும், சுவாமி சிலையை பல துண்டுகளாக வெட்டி சோதனை செய்ததில் ஐம்பொன் சிலை இல்லை என தெரியவந்ததையடுத்து வெட்டப்பட்ட ஐயப்பன் சிலை பாகங்களை பல்வேறு பகுதிகளில்  விட்டுச் சென்றது தெரியவந்துள்ளது.


இருவரையும் கைது செய்த போலீசார் சிலை திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த ஒருவரும்,  தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரும் விரைவில் கைது செய்யப்படுவர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


இதன் தொடர்ச்சியாக பறவை நாச்சியார் கோவிலில் திருடப்பட்ட ஐயப்பன் சிலை கண்டுப்பிடிக்கப்பட்டதை அடுத்து, பல ஆண்டுகளாக  வழிபாடு செய்துவந்த  கோவில் குருக்கள் ஐயப்ப குருசாமி தம்புடு என்கிற முருகேசன்  என்பவருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.


போலீசாரின் தகவலைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த கோவில் குருக்கள் வேகமாக ஓட்டமும் நடையுமாக திருவாரூர் நகர காவல் நிலையம் நோக்கி விரைந்து வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த ஐயப்பன் சிலையை பார்த்து மனம் உருகி நின்ற அவர், ஐயப்பன் சிலை பல துண்டுகளாக அறுக்கப்பட்டிருந்ததை கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார்.


அவரை காவல்துறையினர் சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மீட்கப்பட்ட ஐயப்பன் சிலைக்கு மாலை அணிவித்து சாஷ்டாங்கமாக காலில் விழுந்து மரியாதை செலுத்தினார் ஐயப்ப குருசாமி.


பல ஆண்டுகளாக  சுவாமி சிலையை பூஜித்து வந்த ஐயப்ப குருசாமி சிலை பல துண்டுகளாக அறுக்கப்பட்டதை கண்டு கதறி அழுதது போலீசார் மத்தியில் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad