திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டால் நோயாளிகள் படும் அவதியினை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருந்துவருவதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை முற்றுகையிட சென்றவர்களை விளமல் கல்பாலம் அருகே காவல்துறை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் காவல்துறையினரை தள்ளிவிட்டு தடுப்புகளை தகர்த்தி எரிந்து திட்டமிட்டபடி பேரணி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர் மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள்நோயாளியாகவும், வெளிநோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு என எந்தவித தகுதியும் இன்றி மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவில் தகுதியான மருத்துவர்கள் இன்றி பயிற்சி மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளித்துவருவது, காலியாக இருந்துவரும் சிறப்பு மருத்துவ பணியிடங்கள், செவிலியர்கள் பற்றாக்குறை, பிரசவிக்கும் தாய்மார்களிடம் ஆண்குழந்தை பிறந்தால் ரூ.5000ம், பெண் குழந்தை பிறந்தாள் ரூ.1500 என செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்கள் கையூட்டு பெறுதல், மருத்துவமனையில் உள்நோளியாளிகள் தங்கி சிகிச்சைபெறும் வார்டுகளில் கழிப்பறை வசதியின்மை, சுகாதாரமற்ற குடிநீர், மருத்துவமனையின் உள்ளே நாய்கள், எலிகள் தொல்லையால் நோயாளிகள் மட்டுமன்றி பார்வையாளர்களும் தினசரி அவதிக்கு உள்ளாகி வருதல், வார்டுகளில் மின்விளக்குகள், மின்விசறி இன்மையால் நோயாளிகள் அவதியடைந்து வருதல் முதலான பல்வேறு நிலைகளில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சீர்கேடு அடைந்திருப்பதால் நோயாளிகள் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத சூழல் இருந்துவருகிறது.
இதனை கண்டிக்கும் வகையில் திமுகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு அமைப்பான திருவாரூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருச்சி தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில் திருவாரூர் விளமல் கல்பாலம் பகுதியில் இருந்து பேரணியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி நோக்கி செல்ல முற்பட்டனர். அப்போது திருவாரூர் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் வந்த காவலர்கள் அங்கு தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.
அப்போது போராட்டக்காரர்கள் தடுப்புகளை தூக்கி வீசி எறிந்து காவலர்களை தள்ளிவிட்டு முன்னேறி திமுக அரசின் காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்தும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி பேரணியாக சென்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வழியாக சென்ற போராட்டக்காரர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாயிலை முற்றுகையிட்டு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை போராட்டத்தின் எதிரொலியாக காவல்துறையினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாயிலையும் தடுப்புகளை கொண்டு வெகுநேரமாக அடைத்துவைத்ததால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதி அடைந்ததோடு, 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழியாக சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் மாற்ற பாதைவழியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உடனடி சிகிச்சை பெறமுடியாமல் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் நிலையும் உருவானது.
No comments:
Post a Comment