இவ்வாலயத்தில் நாட்டிலேயே எந்த ஆலயத்திலும் காணமுடியாத சிறப்பாக ஸ்ரீஎமதர்மனுக்கு என தனி சன்னதி உள்ளது. மனிதர்களுக்கு ஏற்படும் எமபயத்தை நீக்கி ஆயுளை அதிகரிக்கும் பலன் கொண்ட இவ்வாலயத்தினை ஆயுள்விருத்தி அளிக்கும் ஸ்தலம் என்ற சிறப்புக்குரியது. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இவ்வாலயத்தின் குடமுழுக்கு விழாவினை ஒட்டி கடந்த மூன்று நாட்களாக எட்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான வேதவிற்பனர்கள் கலந்து கொண்டு யாக வேள்வி பூஜை நடத்தினர்.
இன்று காலை எட்டாம் கால யாக சாலை பூஜையில் நிறைவாக மகாபூர்ணாகதி பூஜையுடன் தீபாராதனை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் இருந்து புனித தீர்த்தக்கடங்களை சிவாச்சாரியார்கள் சிரசில் சுமந்து சென்று ஆலய பிரகாரத்தினை வலம்வந்து கோபுர விமான கலசங்களை அடைந்து சிறப்பு பூஜை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து காலை 10.00 மணியளவில் இராஜகோபுரம், மூலஸ்தான சன்னதி கோபுரம், அம்பாள் ஸ்ரீமங்களநாயகி சன்னதி கோபுரம், மற்றும் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர் உள்ளிட்ட சன்னதி கோபுர விமான கலசங்களில் மீது சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி குடமுழுக்கு விழாவினை செய்துவித்தனர்.
குடமுழுக்கு விழாவில் திருப்புகளுர் வேளாக்குறிச்சி ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், தருமை ஆதினம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பரமாச்சார்ய சுவாமிகள், உள்ளிட்ட ஆதின கர்த்தர்கள் மற்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment