திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே புள்ளவராயன்குடிக்காடு கிராமத்தில் அரசு பள்ளி 1963 - ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இப்பள்ளியில்1963 ம் ஆண்டு முதல் தற்போது வரை படித்த பழைய மாணவர்கள் அரசு உயர் அதிகாரிகள் ஆகவும், தனியார்துறை, விளையாட்டு துறை, அரசியல் மற்றும் வெளிநாடுகள் உள்ளிட்ட பல்வேறு துறையின் கீழ் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் புள்ளவராயன்குடிக்காடு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் குழாய் வசதி, நூலக கட்டிட வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இப்பள்ளி கூடத்திற்கு கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படுவதாக, ஆசிரியர்கள் பழைய மாணவர்களிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் பழைய மாணவர் ஒன்றிணைந்து 3 வகுப்பறைகள் அடங்கிய ரூபாய் 5 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் அமைத்து தருவதாக உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து வகுப்பறைகள் இயங்க கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டு அது இன்று திறக்கப்பட்டது. இந்நிகழ்வு அப்பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் பேசிய பழைய மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு அடிப்படையான தேவைகளை பூர்த்தி செய்து, தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருவதாகவும், மாவட்டத்திலேயே கல்வியில் சிறந்த பள்ளியாக புள்ளவராயன் குடிக்காடு அரசினர் உயர்நிலைப்பள்ளியை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment