கூத்தாநல்லூர், டிச. 09 :
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், பொதக்குடி பகுதியில் அமைந்துள்ள தொன்மை சிறப்புமிக்க, ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஹஜ்ரத் நூர்முஹம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் தர்க்காவிற்கு புனரமைப்பு பணிக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ₹1.5 கோடி நிதியை ஒதுக்கியுள்ளார். மத நல்லிணக்கத்தின் அடையாளமாக உள்ள இந்த தர்க்காவிற்கான நிதி ஒதுக்கீடு பல்வேறு தரப்பினரின் பாராட்டிற்குப் பதிலாகியுள்ளது.
தமிழகத்தில் தர்க்காக்கள் மத நல்லிணக்கத்தின் சின்னமாகக் கருதப்படுகின்றன. ஜாதி–மத வேறுபாடுகளின்றி அனைவரும் வழிபடும் தலங்களாக இவை இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து வழிபாட்டு தலங்களையும் மத வேறுபாடின்றி புனரமைத்து பாதுகாக்கும் பணியில் தமிழக அரசு தொடர்ந்து பல கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி வருகிறது.
அந்த வரிசையில் பொதக்குடி தர்க்கா சிதிலமடைந்திருந்ததை கருத்தில் கொண்டு புனரமைப்பு பணிக்காக முதல்வர் ரூ.1.5 கோடி நிதியை ஒதுக்கினார். தமிழக அரசின் முதல் தவணை நிதியான ரூ.52.50 லட்சத்திற்கான காசோலையினை தர்க்கா நிர்வாகிகளிடம் அரசு வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் தர்க்கா புனரமைப்பு பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன.
புனரமைப்பு பணிக்கான கட்டமைப்பு பணிகளுக்கான அளவீடுகள் பொறியாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதக்குடி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த தர்க்கா புனரமைப்பு செயல்படுத்தப்பட்டதில் மகிழ்ச்சி தெரிவித்த மக்கள், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர், தொழில்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
மேலும் தர்க்கா புனரமைப்பு நிதிக்கான பரிந்துரையினை செய்த ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனிக்கும் நன்றியை தெரிவித்தனர்.
© tamilagakural.com | செய்தி & விளம்பர தொடர்புக்கு: 9843663662


No comments:
Post a Comment