கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இச்சாலை புதிதாக அமைக்கப்படாமல் இருந்த நிலையில், சென்னை–கன்னியாகுமரி தொழில்தட திட்டத்தின் கீழ் 2022 அக்டோபரில் ₹110 கோடி மதிப்பில் பணி தொடங்கப்பட்டது. திட்டம் 2024 அக்டோபரில் முடிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒராண்டு தாமதமாக 2025 நவம்பர் 1 அன்று தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் சாலையை திறந்து வைத்தார்.
அதேசமயம், திட்டத்தின் மதிப்பு ₹221.04 கோடியாக இருமடங்காக உயர்ந்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த இருவழிச் சாலையில் 4 சிறு பாலங்கள், 52 குறுப் பாலங்கள், 11,600 மீட்டர் நீள மழைநீர் வடிகால் வாய்க்கால், 19 பேருந்து நிறுத்தங்கள், 2 கழிப்பறைகள், 7330 மரக்கன்றுகள் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் தரையில் நிலைமை வேறுபட்டது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பேரளம் பகுதியில் 10 ஆண்டுகளாக ரயில்வே மேம்பாலம் தொங்கிக் கொண்டிருப்பதாகவும், அதனை இணைக்கும் பணிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் மக்கள் சாடுகின்றனர். அதேபோல் கங்களாஞ்சேரி பகுதியில் பழைய பாலம் நன்றாக இருந்தும், அதற்கு அருகில் புதிய பாலம் முழுமையடையாமல் சாலை திறக்கப்பட்டிருப்பது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சன்னாநல்லூர், பூந்தோட்டம், ஒன்பதுபுளி, முடிகொண்டான் பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள் பல இடங்களில் உள்வாங்கியும் பெயர்ந்தும், மேடும் பள்ளமுமாக காட்சியளிக்கின்றன. சன்னாநல்லூர் பைபாஸ் பகுதியில் சாலை மேடு பள்ளங்களால் இருசக்கர வாகன ஓட்டிகள் விழும் விபத்துகள் தொடர்கின்றன. நமது செய்தியாளர் நேரில் சென்றபோது, புதிதாக திறக்கப்பட்ட சாலையில் ஒரு பெண் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது சறுக்கி விழுந்து காயமடைந்த சம்பவமும் இடம்பெற்றது.
அரசு தரப்பில் 19 பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், அவை பெரும்பாலும் ஊருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளன என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அரசு அறிவித்த 7330 மரக்கன்றுகளில் 1000க்கும் குறைவாக மட்டுமே நடப்பட்டுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை பராமரிப்பில்லாமல் உலர்ந்து விட்டன.
இச்சாலை குறித்த கேள்விகளுக்கு சென்னை–கன்னியாகுமரி தொழில்தட திட்டத்தின் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், தாசில்தார் உள்ளிட்ட பல அதிகாரிகள் தொடர்பு கொள்ளப்பட்டபோதும் “தகவல் தெரியவில்லை” என்று கூறி விலகி வருவதாக தகவல். அவர்களுக்கே தங்களது துறையின் நிலைமை தெரியாமல் இருப்பது பொதுமக்களுக்கு ஆச்சரியத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


No comments:
Post a Comment