திருத்துறைப்பூண்டி – நவம்பர் 21
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட பாண்டி ஊராட்சியில் இருந்து கட்டிமேடு செல்லும் இணைப்பு சாலை கடந்த பத்து வருடங்களாக முறையாக பராமரிக்கப்படாததால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
பாண்டி, சிவன் கோவில் தெரு, செம்பியமங்கலம், ஆதிரங்கம் வழியாக கட்டிமேடு செல்வதற்கு பயன்படுத்தப்படும் இந்த முக்கிய சாலையின் தார் முழுவதும் உரிந்து, தற்போது மண் சாலையாக மாறியுள்ளதால் மழை பெய்தால் சேறும் சகதியும் நிறைந்த சாலையாக காணப்படுகிறது.
அந்த வழித்தடத்தில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தினசரி இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மாணவர்கள் பள்ளி, கல்லூரி செல்லவும், பொதுமக்கள் திருத்துறைப்பூண்டி நகரம், மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்லவும் இது மட்டுமே முக்கிய பாதையாக உள்ளது.
தொடர்ந்து ஏற்படும் சேறும் குழியும், சரிவுகளும், பள்ளங்களும், வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. பலரும் இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் கூறுகின்றனர்.
பெருமழை காலத்தில் சாலை முழுவதும் சதுப்பு நீர் தேங்கி, எது மேடு, எது பள்ளம் என்று தெரியாத நிலையில் மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் கடும் சிரமத்தில் பயணிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக பார்வையிட்டு, புதிய தார் சாலை விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:
Post a Comment