கும்பகோணம் ரபி அசோசியேட்ஸ் நிறுவனத்தால் பொறியாளர் M.N.முகமது ரபி அவர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்டிருக்கும் இந்த புதிய பள்ளிவாசலில் , ஒரே நேரத்தில் 500 க்கும் மேற்பட்டோர் அமர்ந்து பிரார்த்தனை செய்யும் வகையில் கட்டிடம் வடிவமைக்கப் பட்டிருப்பதோடு, வானவில்லின் கோபுரம் ஒன்றும் முகப்பில் அமைக்கப்பட்டு அழகு மிளிர வைக்கப்பட்டிருந்தது.
இந்த புதிய பள்ளி திறப்பு விழாவில் கடியாச்சேரி முஸ்லீம் ஜமாஅத் மன்ற நிர்வாகிகளான தலைவர் சம்சுதீன் , செயலாளர் ஷேக்மைதீன், பொருளாளர் சாகுல் ஹமீது, உறுப்பினர்கள் மற்றும் அனைத்து சமுதாய பெருமக்கள் முன்னிலையில் தண்ணீர் குன்னம் ஹாஜி கே.என்.எம்.ஜபருல்லா அவர்கள் பங்கேற்று திறந்து வைத்தார்.
மாவட்ட ஊராட்சி பெருந்தலைவர் தலையாமங்கலம் பாலு, சட்டமன்ற உறுப்பினர்கள் கா மாரிமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி, ஒன்றியக்குழு தலைவர் அ.பாஸ்கர், நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், வர்த்தகர் சங்க தலைவர் எம்.வி.கே.செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு முதல் நாள் 01.02.2024 வியாழன் இரவு பெண்களுக்கான சிறப்பு தொழுகை மற்றும் சிறப்பு பயான் நடைபெற்றது. அதில் காயல்பட்டினத்தை சேர்ந்த அல்ஹாஜ் அல் ஹாபிழ் மௌலான மௌலவி அஹ்மது அப்துல் காதர் மஹ்ழரி மற்றும் ஜனாபா. கதீஜதுல்குபுரா ஆலிமா ஆகியோர் பெண்களுக்கான சிறப்பு பயான் நடத்த, அடுத்தநாள் நடைபெறும் திறப்புவிழாவில் எம்.முகமது அபுதாகிர் பாகவி அவர்கள் ஹுத்பா சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக மத நல்லிணக்க ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் கொத்தமங்கலம் ஊராட்சியை சேர்ந்த அனைத்து சமுதாய மக்கள் ஒன்றிணைந்து பள்ளிவாசலுக்கு சீர் கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இந்து மற்றும் கிறஸ்தவ மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சீர் கொண்டு வந்தனர். விழாவிற்கான பிரமாண்ட பந்தல் அமைப்பை மதுக்கூர் மகாராஜா டெக்கரேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் பஷீர் அவர்கள் அமைத்து சிறப்பிக்கிறார்.
70 ஆண்டு வரலாற்றை கொண்ட இந்த பள்ளி வெறும் கொட்டகையை கொண்டு இயங்கிய நிலையில் இருந்து பின்னர் ஓட்டு கட்டிடம், கான்க்ரீட் கட்டிடம் என வளர்ந்து இன்று பிரமாண்ட வடிவமைப்பில் உருவாகி இருக்கிறது. மேலும் இந்த பள்ளி இஸ்லாமிய வேதபாடசாலையாகவும் செயல்பட்டு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை வேதம் கற்க வைத்து இருப்பதும், பலநூறுக்கான திருமணங்களை சட்ட முறைப்படி நடத்திய பெருமையும் கொண்டது.
ஆண்டுதோறும் ரமலான் மாதம் 30நாளும் இரவு நேரத்தில் நோன்பு திறப்பு நிகழ்வும், 27 ம் கிழமை சிறப்பு தொழுகை நிகழ்வும் இந்த பள்ளிவாச லில் பிரசிதிப்பெற்றதாகும். மேலும் கொடி ஏற்றம் நடத்தி 30 நாட்கள் ஜமாத் உறுப்பினர்கள் அனைவருக்கும் பள்ளிவாசல் வளாகத்திலேயே உணவு சமைத்து வினியோகிப்பதும் இந்த பள்ளிவாசல் சிறப்பாகும்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment